தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் பவா செல்லத்துரையின் கதையாடல் மூலமே எனக்கு அறிமுகம் ஆனது. நாவலின் கதைக்களம் மற்றும் அது பேசும் விசயம் என்னை வாசிக்க தூண்டியது. நேற்று தான் படிக்க தொடங்கினேன். புத்தகத்தை வைக்க மனமே வராததால் தொடர் வாசிப்பாய் முடித்தேன். பல வருடங்களுக்கு பின் தொடர் வாசிப்பில் முடித்த புத்தகம் இது, அதுவே பெருமகிழ்ச்சி தந்தது.
கதைக்கருவும், எழுத்து நடையும் நம்மை இதனுள் மூழ்கடித்து விடுகிறது. மனித வாழ்வு சாஸ்திரம் , சமூக கட்டுகளால் அன்றி மனித உணர்வால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதே கதையின் நோக்கு.
தி.ஜாவின் மொழியும் , சத்தமின்றி சமூக புறையோடல்கள் மீது சாட்டையை சுழற்றும் வித்தையும் பிரமிக்க வைத்தன. இந்நாவலில் நாகரீகத்தின் உச்சம் நாங்கள் தான் என ஏமாற்றும் பிராமணர்களின் அடி மடியில் கைவத்திருக்கிறார். இந்த நாவலுக்காக தி.ஜா வை ஊருக்குள் வர தடை விதித்திருக்கிறது அவர் கிராமம். ஆனால் இவர் பேசிய விசயத்திற்கு இதெல்லாம் குறைவு தான்.
1960 களில் பெண்களின் விருப்பு, வெறுப்புகளை கணக்கில் கொள்ளாமல் குடும்ப கவுரவம், சாதி, ஆச்சாரம், பண்பாடு என பலவற்றின் பெயரால் தீர்மானிக்கபட்டு பெரும் அழுத்தத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்களின் வாழ்வு தான் கதையின் அச்சாரம். பின் அவர்கள் தங்கள் மன விருப்பப்படி வழக்கத்தை உடைத்து , தங்கள் வாழ்வின் நிகழ்வுகளை விருப்பப்படி தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படியான அவர்களின் மீறல்கள் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை மிக எதார்த்தமாக எழுதியுள்ளார் தி.ஜா.
அப்பெண்கள் இருவரின் மீறல்களுக்கான நியாத்தை பெண்கள் மீதான கனிவோடு அதே நேரத்தில் கம்பீரமாகவும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அவரின் இந்த மாதிரியான வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பிராமண சமூகத்தின் ஆணாதிக்கத்தையும், பிற்போக்குத்தனங்களையும், வேதங்கள், புரோகிதம் போன்ற பித்தலாட்டங்களையும் பல இடங்களில் சாடியிருக்கிறார். அதோடு ஆண், பெண் உறவின் உளவியல் சிக்கல்களை நுட்பமாகவும் , மிக ஆழமாகவும் பேசியுள்ளார். வருடங்கள் பல கடந்தும் இன்றும் பெரும்பாலான பெண்களின் வாழ்வு இந்நாவில் இருக்கும் நிலையிலேயே இருப்பது தான் நம் சமூகத்தின் கேவல நிலை.
காவிரி, வயல் வெளி, அமைதி, அன்பான மனிதர்கள் என கிராம வாழ்வின் அழகியல்களையும் கதைக்கு இடஞ்சல் தராமல் போக்கிலே மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக பெண்களின் அழகை தி.ஜா போல் ஒருவராலும் கொண்டாட முடியாது என நிரூபிக்கும் இடங்களும் பல உள்ளன, அவையெல்லாம் ரசித்து தீராதவை.
ஆண்கள் அனைவரும் அவசியம் படித்து தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய புத்தகம் இது. அனைவரும் அவசியம் வாசியுங்கள் நண்பர்களே !
Comments
Post a Comment