Skip to main content

Posts

Showing posts from 2020

மழை என்ன செய்யும்

மழை மனங்களையும் கூட ஈரமாக்குகிறது. சொல்லிலும், செயலிலும் கணிவு வெளிப்படுகிறது. மரங்கள், விலங்குகள் போலவே நமக்கும் ஓர் புத்துணர்ச்சி பிறக்கிறது. மழை மனதின் கீழ்மை களை சுத்தம் செய்கிறது மனம் எடையிழந்து மெலிதாக பறக்க தொடங்கி விடுகிறது. மழைக்கு பிந்திய மிருதுவான குளிர் காற்றால் மனம் துள்ளாட்டம் போடுகிறது. அந்த குளுமை நாசியின் வழியே உயிரின் மையப்புள்ளியை தொட்டு திரும்புகிறது. இலைகள் எல்லாம் ஆசையோடு தேக்கி வைத்த மழையை பிரிய மனமில்லாமல் மெல்ல விடுவிக்கிறது. மேகங்கள் எல்லாம் தன்னை கரைத்து மண்ணில் கலந்து பூரணம் அடைந்து விட்டது. ஏனோ கொஞ்சம் மேகங்கள் பயணம் செல்லாமலேயே மலை முகடுகள் மேல் சுகமாக ஓய்வெடுக்கின்றன. மழை வந்த மகிழ்ச்சியில் நிலம் பூத்து வாசம் பரப்ப தொடங்கி விடுகிறது. எவ்வளவோ முயன்றும் அந்த வாசத்தை மனதில் பூட்டி வைக்க இயலவில்லை. காக்கைக்கும் குளித்து முடித்த குழந்தையின் புது அழகு வந்துவிடுகிறது. மழை கண்ட களிப்பில் குருவிகள் யாவும் விடாமல் கூவிக்கிடக்கின்றன. மொத்தத்தில் யாவும் தேவதையின் மந்திரக் கோல் பிரயோகம் போல மாறிவிடுகிறது. அதுசரி மழையும் தேவதை தானே. 

அருள் ஜெகன் எனும் தேவதை

அருள் ஜெகன் அண்ணனை பற்றி எழுத வேண்டும் என நினைத்ததுமே  கருணையும், தாய்மையும் சேர்ந்து ஒரு தேவதையாகவே அவன் மனதில் உருப்பெற்றான். மேலும்  இக்கட்டுரைக்கு தேவதை எனும் தலைப்பே வந்து நிலைபெற்று விட்டது. எவ்வளோ யோசித்தும் தேவதையை தாண்டி வேறு வார்த்தை ஏதும் தோன்றவே இல்லை. அருள் ஜெகன்  எனது கல்லூரியில் படித்த அண்ணன். நம் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அல்லது மதிக்கப்படும் அடையாளங்களின் படி அவன் ஒரு மென்பொருள் பொறியாளன். அனால் என்னளவில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நண்பர்களே. மாறாக அவனது தேவதை அவதாரமே நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. அவனது தேவதை கதைகளின் வழியாக அவனை உங்களுக்கு அறிமுகம் செய்வதையே விரும்புகிறேன். அவ்வாறு அவன் உங்கள் மனதில் பதிவதையே அவனுக்கான சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன்.  உண்மையில் இந்த மாதிரியான எந்த அங்கீகாரத்தையும், பெருமைகளையும் அவன் சட்டை செய்வதில்லை.  அதனாலேயே அவன் என் மனதில் தேவதை எனும் உருவம் கொள்கிறான். பொதுவாக கல்லூரியின்  இறுதி ஆண்டு படிக்கும் எல்லோரும் குறிப்பாக இயந்திரவியல் துறை மாணவர்கள் ஊர் சுற்றுதல், நண்பர்கள் இல்லத்திற்கு செல...

மோட்சம் தாராயோ

வாழ்வில் வசந்தங்கள் தந்திட, என்னில் பாதியை ஏற்றிட , கை கோர்த்து இலக்கின்றி நடந்திட, மங்கும் மாலைகளை சேர்ந்து இரசித்திட, மடியினில் சாய்ந்து துயில் கொண்டிட, காதல் களித்து கொண்டாடிட, தோள் சாய்த்து துயர் நீக்கிட , அரவணைத்து அமைதி தந்திட , நம் கனவுகளை இணைந்து நனவாக்கிட , மெல்லிய சுரத்தினில் காதல் மொழி பேசிட , திகட்டாமல் தீராமல் காதல் செய்திட, உன் உயர்வு கண்டு நான் பூரித்து மகிழ்ந்திட, என்னை அழகாய் கொண்டு ரசித்து சிலாகித்திட, பரிசு பரிமாற்றங்கள் நடத்தி இரசித்திட, பேரன்போடு பெரு வாழ்வு வாழ்ந்திட , பிரிவுகள் வாட்டி வதைத்திட, கண் பார்வையிலே தீராக் கதைகள் பேசிட, கள்ளப் பார்வைகளில் உறைந்து மீண்டிட, இயற்கையை ரசித்து மெய் மறந்திட, புத்தகங்களில் புதைந்து தொலைந்திட,  பேரின்ப மழையினில் மழலையாய் ஆட்டம் போட்டு திளைத்திட, சில நிமிடம் நீடிக்கா செல்லச் சண்டைகள் போட்டிட, சுதந்திரம், சுய மரியாதையோடு முழு வாழுவு வாழ்ந்திட , கால் கொலுசின் இசை கோர்வைகளில் கரைந்திட , உன் பாதம் பிடித்து பரிகாரம் செய்திட, வெட்கம் கூடிய நின் பேரழகு முகத்தினை ஆராதித்திட ,.      ...

மீட்பை நோக்கி - பயண அனுபவம்

எல்லோர் வாழ்விலும் மறக்க விரும்பா நாள் ஒன்று இருக்கும், என் வாழ்வில் அப்படியான ஒரு நாள் தான் அது. அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியத்துக்கு மேலாகவே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. காரணம் இல்லாத அதீத மன அழுத்தம், எதையாவது உடைக்க வேண்டும் போன்ற மனவோட்டம் இரண்டும் உருவாகியிருந்தது. நேரம் செல்ல செல்ல அந்த அழுத்தம் கூடிக்கொண்டே போனது. எதற்கும் அந்த அழுத்தம் கட்டுப்படவே இல்லை புத்தகம், நண்பர்கள் எதற்கும். மெல்ல அந்த அழுத்தம் தற்கொலை எண்ணமாக மாறுவதை உணரவே மனதில் பயம் வர ஆரம்பித்தது. திடீரென தனியாக எங்காவது பயணம் செல்வோம் அது உதவும் என தோன்றியது. நீண்ட நாள் ஆசையான தஞ்சாவூர் போகலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.  இப்பயணத்தில் கைபேசி இல்லாமல் மனிதர்கள் உதவி கொண்டே எல்லா விஷயத்தையும் செய்யணும்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்பதிவுகள் புகைப்படம் கூடாதெனவும் முடிவு.  சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு விரைவு பேருந்தில் ஏறிக்கொண்டேன். பின் பகுதியில் தான் இடம் இருந்தது மெல்ல உள்ளே சென்றேன் ஜன்னல் ஒர இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவனது வசீகரிக்கிற, சுறுசுறுப்பான முகம் மன...

அம்மா வந்தாள் - வாசிப்பு அனுபவம்

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் பவா செல்லத்துரையின் கதையாடல் மூலமே எனக்கு அறிமுகம் ஆனது. நாவலின் கதைக்களம் மற்றும் அது பேசும் விசயம் என்னை வாசிக்க தூண்டியது. நேற்று தான் படிக்க தொடங்கினேன். புத்தகத்தை வைக்க மனமே வராததால் தொடர் வாசிப்பாய் முடித்தேன். பல வருடங்களுக்கு பின் தொடர் வாசிப்பில் முடித்த புத்தகம் இது, அதுவே பெருமகிழ்ச்சி தந்தது. கதைக்கருவும், எழுத்து நடையும் நம்மை இதனுள் மூழ்கடித்து விடுகிறது. மனித வாழ்வு சாஸ்திரம் , சமூக கட்டுகளால் அன்றி மனித உணர்வால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதே கதையின் நோக்கு. தி.ஜாவின் மொழியும் , சத்தமின்றி சமூக புறையோடல்கள் மீது சாட்டையை சுழற்றும் வித்தையும் பிரமிக்க வைத்தன. இந்நாவலில் நாகரீகத்தின் உச்சம் நாங்கள் தான் என ஏமாற்றும் பிராமணர்களின் அடி மடியில் கைவத்திருக்கிறார். இந்த நாவலுக்காக தி.ஜா வை ஊருக்குள் வர தடை விதித்திருக்கிறது அவர் கிராமம். ஆனால் இவர் பேசிய விசயத்திற்கு இதெல்லாம் குறைவு தான். 1960 களில் பெண்களின் விருப்பு, வெறுப்புகளை கணக்கில் கொள்ளாமல் குடும்ப கவுரவம், சாதி, ஆச்சாரம், பண்பாடு என பலவற்றின் பெயரால் தீர்மானிக்கபட்டு ...

புனைவு என்னும் புதிர் - வாசிப்பு அனுபவம்

விமலாதித்த மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் நூலை, தீவிரமாக இலக்கியம் வாசிக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். இக்கட்டுரைகள் வாயிலாக, யார் உன்னத கலைஞன் ? எது கலைப்படைப்பு? கேளிக்கை எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன ? தீவிர வாசிப்பின் வழியாக படைப்பில் இருந்து வாசகன் செல்லும் எல்லைகள் மற்றும் கண்டடையும் விசயங்கள் எவை? என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆழ்ந்த வாசிப்பினால் எழுதியதை வைத்து எழுதாதவற்றை வாசகன் உணர முடியும் என்பது பெரும் படிப்பினை எனக்கு. கட்டுரைகள் தொடர்பான கதைகளும் இப்புத்தகத்திலேயே இருப்பது கூடுதல் சிறப்பு. இது நம் வாசிப்பை பரிசோதிக்க உதவுகிறது.

மாதொருபாகன் - வாசிப்பு அனுபவம்

மாதொருபாகன் - பெருமாள் முருகன் பெரிதாக குறிப்பு எழுத மனம் சம்மதிக்கவே இல்லை. ஆகவே மிகச் சிறிதாக குறிப்பிடுகிறேன். இந்த நாவல் நடப்பது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா. குழந்தையற்ற ஓர் தம்பதியின் பெருங்காதலையும்,ஊர் வாய் தரும் வலியையும் பேசும் நாவல் இது. காலம் மாறி சமூகத்தின் வாழ்நிலை மாறிய போதும் சமூகம் சிறிதும் பண்படவில்லை எனும் உண்மை பெரும் வருத்தம் கொடுக்கிறது. ஏனெனில் இன்றும் ஊர் வாய் புரையோடிப் போன பொது புத்தியால் பலர் வாழ்வில் நெருப்பை அள்ளி கொட்டுகிறது. இந்நாவலிலும் தீராத காதலுடன் வாழும் பொண்ணா-காளியின் அழகிய வாழ்வை ஊர் வாய் அழித்தொழிக்கிறது. பெரும் கோபத்துடனும், அடக்க முடியா துயருடனும் இந்நாவலை முடித்தேன்.

நீயின்றி அமையாது உலகு - வாசிப்பு அனுபவம்

நீயின்றி அமையாது உலகு - முகில் முற்றிலும் மாறு பட்ட ஒர் தன்னம்பிக்கை தொடர். சாதனை மனிதர்களின் வாழ்வின் வழியே நமக்கு தன்னம்பிக்கை ஊ ட்டுகிறார் முகில் அவர்கள். முகிலின் சுவாரசியமான நடை கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கிறது.

மற்றமையை உற்றமையாக்கிட - வாசிப்பு அனுபவம்

மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர் தோழர் வாசுகி பாஸ்கர் முக நூலில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஓர் தளத்தில் சுய பொறுப்புடனும், தரவுகளுடனும் அதேசமயம் நுட்பமாகவும் எழுதப் பட்டவை இக்கட்டுரைகள். சாதி, மதம், இணையம், சினிமா, சமூக ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை மற்றும் பகுத்தறிவு என பல்வேறு விஷயங்களை இப்புத்தகம் பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு புதிய பார்வையையும் திறப்புகளையும் தருபவை. மிக முக்கியமாக சமத்துவமான மானுடம் மிகுந்த ஓர் சமூகம் அமைய தனி மனிதனின் மனமார்ந்த முயற்சியே ஒரே வழி எனும் உண்மையை பொட்டில் அறைந்து கூறுகிறார் தோழர் வாசுகி பாஸ்கர். வாசக சாலையின் வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

வால்காவிலுருந்து கங்கை வரை - வாசிப்பு அனுபவம்

வால்காவிலுருந்து கங்கை வரை - ராகுல்ஜி மனித குல வரலாற்றை சமத்துவ, சகோதரத்துவ மற்றும் பகுத்தறிவு கண்ணோட்டத்தில் பேசும் நூல். மனிதர்களாய் வாழ ஆசைப்படும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. தனிப்பட்ட முறையில் என் வாழ்வை மாற்றிய புத்தகம் இது. இப்புத்தக வாசிப்பின் மூலம் நமது வாழ்வின் பண்பாட்டு அங்கமாய் மாறிப் போன பலவற்றை பற்றிய உண்மை நமக்கு தெரிய வரும். இப்புத்தகம் பகுத்தறிவான மேம்பட்ட வாழ்வை வாழ வழி செய்யும்.