கருவில் வந்த கடவுள்
பிரபஞ்சத்தின் பேரழகியே,உன் பேதமையில் போதை கொண்டேனடி பெண்ணே....
உன் பொக்கை சிரிப்பில் புதைந்தேனடி பெண்ணே மீளவேண்டாமல்...
உன் கேசத்தின் வாசம் தேகமெங்கும் தேங்குதடி பெண்ணே....
என் வார இறுதி எல்லாம் வரமாகிறதடி உன்னால்...
உன் வேல்விழிப் பார்வை என் உடலை ஊடறுத்து செல்லுதடி பெண்ணே..
உன் பேரன்பினால் பிரளயம் நிகழ்த்துகிறாயடி என்னுள் ....
மீசை இழந்தேனே உன்னால், முத்தம் கொடுக்கையில் முகம் சுழிக்கிறாய் என்று....
உன்னை கட்டி அணைக்கையில் ஆர்ட்டிக்கின் அருகில் நானடி ...
அன்பை பொழிந்து அன்னை ஆகிறாயடி அநேக நேரங்களில்....
உன் அரை நொடி மருத்துவத்தில் காயங்கள் எல்லாம் கரைந்து ஓடுதடி....
அன்பினால் அகிலம் காணா யுத்தம் தொடுக்கின்றாயடி என்மேல்...
தலை சாய்ந்து நீ பார்க்கையில் குடை சாய்கிறதடி என் உள்ளம்....
மொழியற்ற போதிலும் கதைகளுக்கு பஞ்சம் இல்லையடி கண்ணே...
என் நிகழ் காலத்தின் நிறங்கள் மாற்றிவிட்டாயடி பெண்ணே....
வாழ்வின் சுவர்களிலெல்லாம் உன் வர்ண ஜாலங்கள் அரங்கேற்றம்
நிகழுதடி ...
காவிரியாய் கரை புரண்டோடுதடி உன் காதல் என்னுள்....
பாட்டன் பாரதியின் பெண்ணாய் உன்னை வளர்த்திட சபதங்கள் உள்ளதடி உள்ளத்தில்....
என் ஆள் மனதில் அரியணை இட்டு ஆள்பவளே என் (மரு)மகளே, என்போல் கடவுளை கைகளில் ஏந்தியவன் எவனுமில்லையடி இப்பூவுலகில்.........
Comments
Post a Comment