தமிழறிஞர் கலைஞர் வாழ்க !!!!
தலைப்பு, கலைஞர் இரண்டும் எனக்கு விருப்பமற்றவை தான் , ஆயினும் இந்த பதிவு நான் மிக நேசிக்கும் ஒன்று . இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன்.
சென்னை வந்து ஒரு வருடமாய் இங்கு வரத்தவறியது குறித்து மனதில் ஒரு உறுத்தல் இருந்ததது. நூலக வாயில் நுழைந்ததும் கட்டிடத்தின் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்று விட்டேன். அப்போது ஓர் கல்வெட்டு கண்ணில் பட்டது , அதில் கலைஞர் பெயர் பொறிக்கப்பட்டதை கண்டதும் தான் இந்த பிரம்மாண்டம் கலைஞரின் படைப்பு என்பது நினைவுக்கு வந்தது. கலைஞரின் வாரிசு அரசியல் , அவரின் ஆட்சியில் நடந்த சுரண்டல், ஊழல் என பலவற்றால் அவரையும் ,கழகத்தையும் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஆயினும் அனைத்தையும் தாண்டி அண்ணா நூலகத்தினால் என் மனதில் அவர் இன்று உயர்ந்து விட்டார் .
ஏனெனில் புத்தக வாசிப்பு மிகக்குறைந்த அளவில் உள்ள ஒரு தொண்மைச் சமூகம் நமது தமிழ்ச் சமூகம். நமது நிலையை நன்கு உணர்ந்து புத்தக வாசிப்பை பெருக்க, கலைஞரின் இந்த நூலகம் ஓர் ஆகச்சிறந்த முயற்சி ஆகும். மேலும் புத்தகக் காதலர்கள் , ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் போட்டி தேர்வு எழுதுபவர்கள் , அகப் பார்வையுடையோர் என அனைவருக்கும் வயது வித்தியாசம் இன்றி இந்த நூலகம் ஒரு வரம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . இதை நான் கண்டுணர்ந்தே சொல்கிறேன். எட்டு மாடிகள் கொண்ட நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க .வைக்கிறது. அனால் சமீபத்திய தமிழ் நூல்கள் இன்னும் வந்து சேர வில்லை போலும். படைப்பாளிகள் தயவு கூர்ந்து தங்கள் படைப்புகள் அனுப்ப முயலுங்கள்
சென்னையில் பிரமாண்டமாய் மால்களை மட்டுமே பார்த்த எனக்கு நூலகத்தின் பிரமாண்டம் மலைப்பைத்தந்தது . அது மட்டுமின்றி முற்றிலும் குளிரூட்டப்பட்ட தெளிவான உட்கட்டமைப்பு பாராட்டத்தக்கது. உண்மையான சிரத்துடன் நூலகத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. இதில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள் என்ற கணக்கை தள்ளி வைத்து விட்டு அதன் நோக்கத்திற்க்காக கலைஞரை நிச்சயம் கொண்டாடலாம்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட காரணத்தால் பராமரிப்பு பணிகள் யாவும் இப்போது சரிவர செய்யப்படவில்லை . ஆட்சியை காப்பாற்ற போராடுபவர்கள் நூலகங்களில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பது மடத்தனம் . அரசியலை விடுவோம் ..
சென்னைவாசிகள் தயவு செய்து உங்கள் குழந்தைகளை மால்கள் , கோவில்களை விட நூலகம் அழைத்து செல்லுங்கள். புத்தகம் நம் உலகை விரிவாக்கும் , அறிவை விசாலமாக்கும் , அன்பை மனதில் விதைக்கும் , சிந்திக்க தூண்டும்.
சிந்திக்க தெரிந்த சமூகம் நிச்சயம் மேன்மை பெரும்.
நூலகங்களை பெருக்குவோம் ...
புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்..
அறிவார்ந்த தமிழ் சமூகத்தை மீட்டெடுப்போம்...
ஒரு வரியில் சொல்வதானால் உலகத்தரத்தில் ஓர் நூலகம் நம் சென்னையில்........
Comments
Post a Comment