உள்ளத்தில் கல்லூரி காலத்தின் நினைவுகள் ஆழிப் பேரலையாய் வெகுண்டு எழுந்து என்னை எழுத தூண்டின .அப்பேரலையின் விடா முயற்ச்சியின் வெற்றிதான் இந்த பதிவு.
கவலை, போட்டி, பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி என தீமை யாவுமின்றி வாழ்வின் பரிசுத்தமான நாட்களாய் நகர்ந்தவை அவை. வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கான நிர்பந்தத்தின் விளைவான இந்த நெருக்கடி நாட்களில் சற்று பின்னோக்கி பார்த்ததும் மனம் கட்டி எழுப்பும் கல்லூரியின் நினைவுகளை வார்த்தைகளில் வார்த்து எடுப்பது தனி அலாதிதான்.
கல்லூரி முடித்த யாவரும் திரும்பி பாருங்கள் கல்லூரியின் நினைவுகள் ஏதும் திரும்பவில்லையெனில் நீங்கள் வாழ்வின் மதிப்பில்லா நாட்களை சரியாய் வாழ தவறிவிட்டீர்கள். மிகப்பாவம் நீங்கள்.
சற்று உற்று நோக்கினால் அவை கவலை இல்லா நாட்கள் இல்லை ஆனால் கவலைகளை மறக்க வைத்த நாட்கள் மறக்க வைத்தது அந்த இடம் காரணங்கள் பற்பல...
கல்லூரியின் ஒரு நாள் எந்த அவசரமும் இன்றி மிக நிதானமாக அமைதியாக தொடங்கும். வீட்டிலிருந்து வெளியேறியதும் சில நாட்கள் சொந்த ஊரின் தென்றல் தீண்டும் தருணங்களில் புதுப்பிறப்பு கிடைக்கும். அப்பொழுது மனம் கைக்குழந்தையாய் துள்ளாட்டம் போடும். ஒரு ஆழ்ந்த பெருமூச்சு மனதின் ஆதி ஆழம் வரை புத்துணர்ச்சி தரும்.
சில அடிகள் கடந்ததும் ஒரு குரல் கேட்க்கும்.
"தம்பி நில்ரா இவளையும் கூட்டிப்போ".
குரலின் விளைவாய் நின்று திரும்பினால் அந்த கயல்விழியால் காட்சி தருவாள். அவளின் டை சரிக்கட்டி, பவுடர் துடைத்துவிடும் போது பொறுமையாக நின்று நோக்கும் அவள் கண்கள் கடத்தும் அன்புக்கு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை.
அவள் நடைக்கு இணை நடை போட்டு போகும் வழியில் அவள் கேட்கும் கேள்விகளை அன்று பேதைமை என்று இருந்தேன். உண்மையில் அவை மேதமை.
பேருந்து நிறுத்தத்துக்கு வரும் வலி நெடுக ரசனைக்கு தீனி போட ஏராளம் இருந்தன. செடிக்கு தண்ணீர் ஊற்றும் அக்கா, ரோஜா சொட்டும் மழை, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் கிளப்பும் புழுதி, வேலைக்கு நடுவிலும் காலை வணக்கம் வைக்கும் சைக்கிள் கடை மாமா, கடந்து போகையில் புன்னகை தரும் பேப்பர் தாத்தா என ரசனைகளின் எல்லைகளை உடைத்தெறிந்தவை என் கல்லூரி நாட்கள்.
இவை யாவும் எல்லோர் பாதையிலும் இருப்பவையே ரசனைக் கண்களை பலரும் திறப்பதேயில்லை. உண்மையில் துன்பத்தின் வடிகால் ரசனையே, முயலாமை தான் இங்கு பிரச்சணை.
கல்லூரி காலத்தின் மிக முக்கிய அங்கம் கல்லூரி பேருந்து. அவன் உயிருள்ளவன் போலே எங்களுள் நடமாடுவான் அவனுக்காக சண்டைகள், விவாதங்கள், பெருமைகள் யாவும் உண்டு.
முதல் படியில் கால் வைத்ததும் என் புன்னகையின் உற்ச்சாகத்தை வாங்கி வணக்கத்தில் பொதிந்து திரும்ப தரும் டிரைவர் அண்ணன், தான் மூழ்கியிருக்கும் வேலையிலிருந்து வெளியேறி புன்னகை பூக்கும் தோழிகள், சகோக்கள், எனக்கு இருக்கை தந்து என் மடியில் அமர சண்டையிடும் நண்பர்கள் என அன்பினாலான மனிதர்களால் நிரம்பியது அந்த பேருந்து .இவ்வாறான தூய அன்பு கொண்ட மனங்களை வென்றதை எண்ணி இக்கணம் கர்வம் கொள்கிறேன்.
கல்லூரியின் கல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு தென்றலை வருட விட்டு கண்களை பெண்கள் பக்கம் படரவிட்டு இளமையை அனுபவித்த கணங்கள் யாவும் பேரானந்தமே. கணநேரத்தில் காதலர்கள் நிகழ்த்தும் பார்வை பாரிமாற்றங்களின் தருணங்கள் இப்போதும் புன்னகை தருவிக்கின்றன.
முதல்வர் வந்து எங்களை விரட்ட தரும் வசனங்களை நாங்களே பேசி வகுப்புக்கு போவோம் .
மதிய உணவு மிக முக்கிய அங்கம், வாழ்வின் வரும் நாட்களில் நண்பர்கள் யாவரும் எப்பெறும் உயரத்துக்கு போனாலும் அந்த மதிய உணவுக்கான சண்டைதான் வந்த பாதையின் பிணைப்பாய் நின்று எங்களை பாதுகாக்கும். செருக்கை அண்டவிடாமல் மனிதனாக்கும்.
கல்லூரியின் சம்பவங்கள் யாவும் அப்போது சாதாரணமாக இருந்தாலும் நினைவுகளாய் அவை பேருருவம் கொள்கின்றன. அப்பேருருவமே வாழ்வின் வியப்பு.
கல்லூரியில் நம் ஆதர்ச அழகன்/ அழகியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவதும், ஏமாறுவதும் இன்பம் தந்தது விந்தையே.
கல்லூரி நினைவுகளில் இனிப்புக்கு சமமாக கசப்புகளும் உள்ளன. இவ்விரண்டயும் சுவைக்காமல் ரசனை முழுப்பெறாது அல்லவே.
நான் தோற்ற போதெல்லாம் தோள் கொடுத்த நட்புகளை பரிசளித்த காலம் அது. அதை எங்கணம் மறப்பது. இன்றைய வாழ்வின் கணங்களில் கல்லூரியின் ஏதோ ஒரு நினைவு எழுந்து என்னை ஏங்க வைக்கிறது .
நிதானமாய் கவனிக்கையில் அங்கு பேச்சுக்கள் தான் பெரும்பாலும் நிகழ்ந்தன . அங்கு பேசப்படாதவை யாவும் இல்லை.
கல்லூரியின் மாலை பருக பருக திகட்டாதவை. பேருந்துக்காக காத்து நிற்கையில் நண்பனின் காதலுக்கு உதவி எனக் கூறி என் ரசனையை படர விடுவேண். என் பேரழகி நடந்து பேருந்து ஏறும் அழகினை கண்டு உள்ளம் சொக்கும் கணங்கள் யாவும் சிறந்த நினைவோவியங்களே.
நான்
எழுத்தாளனாகணும்னு சொன்னதும் தட்டிக்கொடுத்து எழுத்துலகத்தை அறிமுகம் செய்த துறைத்தலைவர், ஆசிரியரின் எல்லைகளை கடந்து உடன் பிறந்த உறவாய் நேசித்த அண்ணன்கள் என எல்லோரும் எதிர்பார்ப்பில்லா
அன்பை விதைத்து சென்றுள்ளனர். வாழ்விற்கு அளப்பரிய பரிசளித்த அவர்களுக்கு கோடான கோடி
நன்றிகள் போதாது.
கல்லூரி நினைவுகளில் விடைகாணா கேள்விகள் பல இருந்தும் அந்நினைவுகள்
சொல்ல துடிப்பவை தூய அன்பை மட்டுமே. அளவில்லாமல் அன்பு செய்யவே அவை உரக்க கூறுகின்றன.
கல்லூரி தந்தவை நாம் வென்ற அன்பு மனங்களும், நம்மை வென்ற அன்பு மனங்களுமே ஆகும். யாசிக்க
வைக்கும் இந்த காலத்தின் நினைவுகள் தான் மீதமுள்ள வாழ்வை இயங்க வைக்கும் பேராற்றல்.
கல்லூரி தந்த கற்பிதங்கள், நினைவுகள், உணர்வுகள் என யாவும் வாழ்வுடன் பிணைந்து இறுதி வரை நிச்சயம் பயணிக்கும். இப்பெரும் பொக்கிஷ நினைவுகளை தக்க வைத்து, அவவ்ப்போது அசைபோட்டுக்கொண்டு
உங்களை புதுப்பித்து கொண்டு வாழ்வில் நகருங்கள்........
Arumai pathivu.....vaarthaikal ovovundrum Manathai Varudiyathu !!!! Inum Ithu pol Pala unarvukal kudiya kathaikalai elutha vaalthukal....
ReplyDeleteEndrum Ethirpapudan....
N.S.R ...
Superda ....
ReplyDeleteInnum niraya ezhuthu...
Endrum anbudan
Prabhu