எஸ்.ராமகிருஷ்ணனின் ரயில் நிலையங்களின் தோழமை பயணக் கட்டுரைத் தொகுப்பில் காந்தி நினைவிடம் சென்றது பற்றிய கட்டுரை வாசித்ததும் காந்தி பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை தொற்றிக் கொண்டது. அவ்வாறே பல ரூபங்களில் காந்தி புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். காந்தியை மேலோட்டமாக ஆனால் பல கோணங்களில் அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியது. வாசித்து முடித்ததும் காந்தியை பற்றிய மதிப்பு பெரிதும் கூடியது. கொள்கை, தத்துவம் மற்றும் நம்பிக்கை ரீதியாக காந்தியுடன் பல முரண்கள் இருந்தாலும் அவர் ஆன்மா, கருணை மற்றும் பண்புகள் என்னை பிரமிக்க வைத்தன. காந்தியின் இருபத்து ஏழு ரூபங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி இப்புத்தகம். காந்தி பற்றி பொதுச் சமூகம் அறிந்திராத பல ஆச்சர்யமான, வியக்கத்தக்க மற்றும் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் தகவல்கள் உள்ளன. காந்தி தான் செய்த எல்லா பணிகளையும் நேசத்துடன், அர்ப்பணிப்புடன், ஆழமாக செய்திருக்கிறார். ஏனோ தானோ என எந்த பணியையும் அவர் செய்யவில்லை. காந்தி கருணை பொங்கும் உள்ளம் கொண்டவர். அன்னை தெரசா போலவே எனக்கு தோன்றினார். எளிய மக்கள் மேல் அளவு கடந்த நேசம் கொண்டிருந்தார். நாட்டு மக்களின் துன்பம்...