Skip to main content

Posts

Showing posts from July, 2020

மழை என்ன செய்யும்

மழை மனங்களையும் கூட ஈரமாக்குகிறது. சொல்லிலும், செயலிலும் கணிவு வெளிப்படுகிறது. மரங்கள், விலங்குகள் போலவே நமக்கும் ஓர் புத்துணர்ச்சி பிறக்கிறது. மழை மனதின் கீழ்மை களை சுத்தம் செய்கிறது மனம் எடையிழந்து மெலிதாக பறக்க தொடங்கி விடுகிறது. மழைக்கு பிந்திய மிருதுவான குளிர் காற்றால் மனம் துள்ளாட்டம் போடுகிறது. அந்த குளுமை நாசியின் வழியே உயிரின் மையப்புள்ளியை தொட்டு திரும்புகிறது. இலைகள் எல்லாம் ஆசையோடு தேக்கி வைத்த மழையை பிரிய மனமில்லாமல் மெல்ல விடுவிக்கிறது. மேகங்கள் எல்லாம் தன்னை கரைத்து மண்ணில் கலந்து பூரணம் அடைந்து விட்டது. ஏனோ கொஞ்சம் மேகங்கள் பயணம் செல்லாமலேயே மலை முகடுகள் மேல் சுகமாக ஓய்வெடுக்கின்றன. மழை வந்த மகிழ்ச்சியில் நிலம் பூத்து வாசம் பரப்ப தொடங்கி விடுகிறது. எவ்வளவோ முயன்றும் அந்த வாசத்தை மனதில் பூட்டி வைக்க இயலவில்லை. காக்கைக்கும் குளித்து முடித்த குழந்தையின் புது அழகு வந்துவிடுகிறது. மழை கண்ட களிப்பில் குருவிகள் யாவும் விடாமல் கூவிக்கிடக்கின்றன. மொத்தத்தில் யாவும் தேவதையின் மந்திரக் கோல் பிரயோகம் போல மாறிவிடுகிறது. அதுசரி மழையும் தேவதை தானே.