அருள் ஜெகன் அண்ணனை பற்றி எழுத வேண்டும் என நினைத்ததுமே கருணையும், தாய்மையும் சேர்ந்து ஒரு தேவதையாகவே அவன் மனதில் உருப்பெற்றான். மேலும் இக்கட்டுரைக்கு தேவதை எனும் தலைப்பே வந்து நிலைபெற்று விட்டது. எவ்வளோ யோசித்தும் தேவதையை தாண்டி வேறு வார்த்தை ஏதும் தோன்றவே இல்லை. அருள் ஜெகன் எனது கல்லூரியில் படித்த அண்ணன். நம் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அல்லது மதிக்கப்படும் அடையாளங்களின் படி அவன் ஒரு மென்பொருள் பொறியாளன். அனால் என்னளவில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நண்பர்களே. மாறாக அவனது தேவதை அவதாரமே நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. அவனது தேவதை கதைகளின் வழியாக அவனை உங்களுக்கு அறிமுகம் செய்வதையே விரும்புகிறேன். அவ்வாறு அவன் உங்கள் மனதில் பதிவதையே அவனுக்கான சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். உண்மையில் இந்த மாதிரியான எந்த அங்கீகாரத்தையும், பெருமைகளையும் அவன் சட்டை செய்வதில்லை. அதனாலேயே அவன் என் மனதில் தேவதை எனும் உருவம் கொள்கிறான். பொதுவாக கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும் எல்லோரும் குறிப்பாக இயந்திரவியல் துறை மாணவர்கள் ஊர் சுற்றுதல், நண்பர்கள் இல்லத்திற்கு செல...